"தன்காதலைச் சொல்ல சென்ற காதலியிடம் இருந்து, "ஏன் வநதாய்?" என்ற கேள்வியை எதிர்பாராத ஆண்மகன், விடையாய் வெளிப்படுத்திய காதல் மொழிகள் இவை."
விழியென்னும் வீணையில்
இமையென்னும் விரல்கள்
கானம் இசைக்கும்
அழகை ரசிக்க வந்தேன்!
உன்காது மடலோரம்
கதைபேசும் தென்றலினால்
நாட்டியமாடும் வளையங்களின்
நடனத்தை ரசிக்க வந்தேன்!
உன்அல்லி இதழ்களில்
தேனருந்தத் துடிக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
அதிஷ்டத்தை ரசிக்க வந்தேன்!
வெள்ளிப் புன்னகைநீ
சிந்தஉன் கன்னத்தில்
தோன்றும் குழியின்
ஆழத்தை ரசிக்க வந்தேன்!
காற்றில் கோலமிடும்
உன்கைகளில் விரலெனும்
வெள்ளைத் தூரிகைகளின்
மென்மையை ரசிக்க வந்தேன்!
உனைத்தொட ஏங்கும்
மணற்துகளை அலட்சியப்படுத்திய
பாதக் கமலங்களின்
கர்வத்தை ரசிக்க வந்தேன்!
கனவில் காதலைச்
சொன்னபோது நாணம்கொண்ட
நின்முக பாவனைகளை
நேரில் ரசிக்க வந்தேன்!!!
உன்நினைவில் துடிக்கும் இதயத்தின்
மௌனராகத்தை பாட வந்தேன்!!! - ஆம்!
என்காதலைச் சொல்ல வந்தேன்!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக