விண்ணை முட்டிய கோஷங்கள்!
அகிலம் அதிர்ந்த ஆர்ப்பாட்டங்கள்!
ஆண்டுக் கணக்காய் சிறைவாசங்கள்!
மண்ணில் குளமான செங்குருதிகள்!
மரணத்தைத் தழுவிய வீரர்கள்!
அறியாமையால் இழந்த சுதந்திர விருட்சத்தை
மீண்டும்காண நம்மண்ணில் புதைந்த விதைகளிவை!
விதைகள் முளைத்ததா என்ற
அச்சம் எனக்கு! - ஆம்!
மும்மாரி பொழிந்து
முப்போகம் விளைந்த வயல்வௌிகள்!
வெற்றிச்செய்தியை மார்புத்
தழும்புகளாய் பொறித்திடும் வீரம்!
முல்லைக் கொடிக்கும்
பரிவுகாட்டிய இரக்க குணம்!
பசுவின் புகாருக்கும் செவிசாய்த்து
நியாயம் வழங்கிய நீதி!
அடிமைச் சிறைக்குள் அகப்படுமுன்
அழியாத செல்வங்களாய் நாம்கொண்டவை!
அதிகாரம் இழக்கையில் அன்பளிப்பாய் இழந்தவை!
இவற்றைப் பெற்றுக் கொண்டல்லவா
நாம்சொல்ல வேண்டும்!
சுதந்திரம் அடைந்தோம் என்று!
மாறாக!
அன்றிருந்த அதேபிரிவினை!
சாதி மதங்களாய்!
அன்றிருந்த அதேபகை!
மாநிலங்கள் வடிவில்!
அன்றிருந்த அதேசூழ்ச்சி
அரசியல் அரங்கத்தில்!
இன்னும் அடையவில்லை நாம்
அதிகாரத்தை!
ஆங்கிலேயனிடம் மீட்டிய சுதந்திரத்தை
அன்னியனிடம் அடகு வைத்தோம்!
மீண்டோம்என்ற பிரமையில் உள்ளோம்!
சேரர் சோழர் பாண்டியரென
மூவேந்தர்கள் கூட வேண்டாம்!
காமராஜரைப் போல்!
கக்கனைப் போல்!
கலாமைப் போல்!
எம்மண்ணின் மைந்தன்
எமைஆளும் காலம்தான்
எமக்கு சுதந்திரம்!
-- தல்லிதாசன்