புதன், 14 நவம்பர், 2018

ஒருமுறை என்னைப் பார்

ஒருமுறை என்னைப் பார்!
உன்னைக் காண ஏங்கும்
கண்களின் ஏக்கம் புரியும்!
அதில் நிரம்பி வழியும்என்
இதயத்தின் வலிகள் புரியும்!
இமைக்க மறந்த இமைகளின்
நெடுநாள் துயரம் புரியும்!
உன்னோடு பேசத் துடிக்கும்
இதழ்களின் இயலாமை புரியும்!

இவையெதுவும் புரிய வில்லையா?
கன்னக் குழிகளை நிறைத்த
கண்ணீர்த் துளிகளைப் பார்!
என் உயிரின் பிம்பம்!
உன் உருவமாய் தெரியும்!

                               — தல்லிதாசன்

இத்தனை அழகா காதல்

காலைத் தென்றல்
கதிரவனுக்குப் புதிதல்ல!
பேசும் ரோஜா
காதலுக்குப் புதிதல்ல!
மயிலின் நடனம்
கார்முகிலுக்குப் புதிதல்ல!
சிந்தும் மழைநீர்
மண்ணுக்குப் புதிதல்ல!
அலையின் ஓசை 
கடலுக்குப் புதிதல்ல!

ஆனால்!

காலைத் தென்றலில்
உன்மூச்சுக் காற்று புதிது!
ரோஜா இதழ்களில்
உன்வண்ணம் புதிது!
மயிலின் நடனத்தில்
உன்நடை அழகு புதிது!
மழையில் கரைந்த
உன்மேனி முத்துக்கள் புதிது!
அலையின் ஓசையில்
உன்கீதங்கள் புதிது!

என்வாழ்வின் புதுமையே!
எனக்கில்லை பொறுமையே!

உனைக் கண்ட முதல்நொடி
கனவா? நினைவா?
இன்னும் தீரவில்லை குழப்பம்!

உன்னோடு நான்பேசும் மொழி
கற்பனையா? கவிதையா?
இன்னும் தெளியவில்லை மயக்கம்!

மயக்கம் தெளியாமல் குழம்பி நிற்கிறேன்
உன்னை கரம்பிடிக்கும் நன்னாளை எதிர்பார்த்து!

                                    —தல்லிதாசன்
                                      11/12/2018

வெள்ளைக் காகிதம்

இரவின் வண்ண உறவைத் தேடி
புரவி மீதேறி புசித்த அரவம்போல்
புவியைச் சுற்றும் வெள்ளை நிலவு
கவிஞனின் வெள்ளைக் காகிதம்!

மாலையில் சேராத வெள்ளை ரோஜா
காலையில் பூத்த வண்ணச் சோலையில்!அது!
பூவின்மகள் உனக்கு நான்தீட்டும் காதல்
காவியத்தின் வெள்ளைக் காகிதம்!

                               — தல்லிதாசன்

புதன், 7 நவம்பர், 2018

தனிமை

காற்றில் ஒருகீதம் எந்தன்
கண்ணீரைப் பாட! - அதனைக்
கேட்க ஒருஜீவன் இன்றி
என்காதல் வாட!

கவிதை என்னும் 
மொழியில் எந்தன்
விழியின் ஈரம்
மறைந்து போகுதே!

ஒரு நொடியில் எனதுயிரை
உனதாக்கிச் சென்றாய்!
உயிர் பிரிந்த உடலினிலே
எதைத்தேடி வந்தாய்!

காற்றின் மீது
தீட்டும் வண்ணம்!
உணர்வைச் சொல்லும்
கலைகள் ஆகுமா?

                              — தல்லிதாசன்

கனவில் தேடல்

கனவில் ஒருமுறை 
காதல் வருமென
இமைகள் மூடுகிறேன்!

இதயம் ஒருமுறை
இதமாய் இசைத்திட!
ராகங்கள் தேடுகிறேன்!

                       — தல்லிதாசன்

காலை மயக்கம்

சன்னல் ஒரத்தில் சீறிப்பாய்ந்த 
ஒளிக்கீற்று தட்டி எழுப்பிட
கண்விழித்தேன் காலை வந்ததென்று!

கனவில் உனக்குப் பரிசளிக்க
ரோஜா மலர்களைத் தேடினேன்
மொட்டுக்கள் தான் தட்டுப்பட்டது!

ஆனால்! மலர்களின் நறுமணம் மட்டும்
என் நொடிகளை நிரப்பிக் கொண்டிருந்தது!
சற்றே சுதாரித்து ஆகாயத்தைப் பார்த்தேன்!

அங்கு நிலவாய் நீ!
என் இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கிறாய்!
உன்விழி பட்ட என் இதயமோ!
முல்லைப் பூக்களாய் பூத்துக் கொண்டிருக்கிறது!

                                            — தல்லிதாசன்

மனிதிக்காக

நான்கு சுவற்றில் உலகம் கொண்டு
அன்பை வேண்டி அயராது உழைத்தும்!
கொள்ளைப் புறத்துக் கோவிலில்
குடியிருப்பாய் நீ!
அந்த மூன்று நாட்களில்!

கல்விக்கான உரிமை பறித்து!
வீட்டு வேலை உனக்கென்றும்
நாட்டு வேலை எனக்கென்றும்
பாகம் பிரிக்க! முடங்கிக் கிடந்தாய்
வீட்டுக்குள்ளே முக்காடு போட்டு!

கற்பென்றும் மானமென்றும்
கட்டுக் கதைகளால் வஞ்சிக்கப்பட்டாய்!
பதியின் உடலில் பாதியான பேதையே!
சதியின் பெயரால் தீயில் இறங்கினாய்!

உணர்வை இழந்து! உரிமை இழந்து!
கலாச்சாரத்தைக் காவல் காக்கிறாய்!
போதைப் பொருளாய் தீட்டுப் பொருளாய்!
பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறாய்!

மனிதியே நீ மறந்து போனாயே!
உன்னை அடிமையென்று 
கட்டியங் கூறுவதே 
இந்தக் கலாச்சாரம் என்று!

மனிதியே நீ மறந்து போனாயே!
வீட்டுக்குள்ளே உன்னை அடைத்து
பல்லிளித்து பரிகசிப்பது
இந்தப் பாரம்பரியம் என்று!

மனிதியே நீ மறந்து போனாயே!
வீரத்தின் விளைநிலத்தில்
விதையை விதைப்பவள் நீ!
பண்பாடு கலாச்சாரம் எல்லாம்
உன் பாதுகைக்கு கீழன்றோ!

மீண்டும் ஒருமுறை உறக்க சொல்வாய்!
உன்னை தீட்டாய் கருதும் கலாச்சாரம்
உலகிற்கே தீட்டு என்று!
உன்னை ஒடுக்கத் துடிக்கும் பாரம்பரியம்
உலகிற்கே கேடு என்று!

                           — தல்லிதாசன்

மனிதம் மறந்தோம்

வாத்து போல தலையறுத்து தினம்
கூத்து போல நடத்திக் காட்டுறான் - அதை
பாத்துக் கொண்டே கண்ணை மூடி
காத்து போல கடந்து போறோம்!

கத்திப் பட்ட பிஞ்சுக் கழுத்து
என்ன பாடு பட்டிருக்கும்! -அதைக்
கண்ணெதிரே கண்ட அன்னை நெஞ்சம்
என்ன துடி துடித்திருக்கும்!

காம வெறி கண்ணை மறைத்ததோ!
சாதி வெறி மனிதம் புதைத்ததோ!
நமக்கென்ன கவலை அதைப் பற்றி!

மூச்சுவிட நேரமில்லாத நமக்கு
கூச்சம் கூட துளியுமில்லை - அதனால்தான்
துச்சமாய் நினைத்து மறந்து போகிறோம்! அவன்
உச்சத்தில் நின்று கொட்டம் அடிக்கிறான்!

                                 - தல்லிதாசன்

ஒருதலை கவிதை

ஒருவரி சொல்வாய் கண்ணே என்
உயிர்வலி தீரும் இன்றே!
விழிகளில் உன்னைக் கண்டே என்
நொடிகளும் நகர்ந்தால் நன்றே!

கற்பனை கவிகள் எல்லாம் என்
நித்திரை பறிக்குது இன்று!
காதலில் விழுந்த நெஞ்சம் உன்னில்
முத்திரைப் பதிப்பது என்று?

                                — தல்லிதாசன்