புதன், 14 நவம்பர், 2018

ஒருமுறை என்னைப் பார்

ஒருமுறை என்னைப் பார்!
உன்னைக் காண ஏங்கும்
கண்களின் ஏக்கம் புரியும்!
அதில் நிரம்பி வழியும்என்
இதயத்தின் வலிகள் புரியும்!
இமைக்க மறந்த இமைகளின்
நெடுநாள் துயரம் புரியும்!
உன்னோடு பேசத் துடிக்கும்
இதழ்களின் இயலாமை புரியும்!

இவையெதுவும் புரிய வில்லையா?
கன்னக் குழிகளை நிறைத்த
கண்ணீர்த் துளிகளைப் பார்!
என் உயிரின் பிம்பம்!
உன் உருவமாய் தெரியும்!

                               — தல்லிதாசன்

இத்தனை அழகா காதல்

காலைத் தென்றல்
கதிரவனுக்குப் புதிதல்ல!
பேசும் ரோஜா
காதலுக்குப் புதிதல்ல!
மயிலின் நடனம்
கார்முகிலுக்குப் புதிதல்ல!
சிந்தும் மழைநீர்
மண்ணுக்குப் புதிதல்ல!
அலையின் ஓசை 
கடலுக்குப் புதிதல்ல!

ஆனால்!

காலைத் தென்றலில்
உன்மூச்சுக் காற்று புதிது!
ரோஜா இதழ்களில்
உன்வண்ணம் புதிது!
மயிலின் நடனத்தில்
உன்நடை அழகு புதிது!
மழையில் கரைந்த
உன்மேனி முத்துக்கள் புதிது!
அலையின் ஓசையில்
உன்கீதங்கள் புதிது!

என்வாழ்வின் புதுமையே!
எனக்கில்லை பொறுமையே!

உனைக் கண்ட முதல்நொடி
கனவா? நினைவா?
இன்னும் தீரவில்லை குழப்பம்!

உன்னோடு நான்பேசும் மொழி
கற்பனையா? கவிதையா?
இன்னும் தெளியவில்லை மயக்கம்!

மயக்கம் தெளியாமல் குழம்பி நிற்கிறேன்
உன்னை கரம்பிடிக்கும் நன்னாளை எதிர்பார்த்து!

                                    —தல்லிதாசன்
                                      11/12/2018

வெள்ளைக் காகிதம்

இரவின் வண்ண உறவைத் தேடி
புரவி மீதேறி புசித்த அரவம்போல்
புவியைச் சுற்றும் வெள்ளை நிலவு
கவிஞனின் வெள்ளைக் காகிதம்!

மாலையில் சேராத வெள்ளை ரோஜா
காலையில் பூத்த வண்ணச் சோலையில்!அது!
பூவின்மகள் உனக்கு நான்தீட்டும் காதல்
காவியத்தின் வெள்ளைக் காகிதம்!

                               — தல்லிதாசன்

புதன், 7 நவம்பர், 2018

தனிமை

காற்றில் ஒருகீதம் எந்தன்
கண்ணீரைப் பாட! - அதனைக்
கேட்க ஒருஜீவன் இன்றி
என்காதல் வாட!

கவிதை என்னும் 
மொழியில் எந்தன்
விழியின் ஈரம்
மறைந்து போகுதே!

ஒரு நொடியில் எனதுயிரை
உனதாக்கிச் சென்றாய்!
உயிர் பிரிந்த உடலினிலே
எதைத்தேடி வந்தாய்!

காற்றின் மீது
தீட்டும் வண்ணம்!
உணர்வைச் சொல்லும்
கலைகள் ஆகுமா?

                              — தல்லிதாசன்

கனவில் தேடல்

கனவில் ஒருமுறை 
காதல் வருமென
இமைகள் மூடுகிறேன்!

இதயம் ஒருமுறை
இதமாய் இசைத்திட!
ராகங்கள் தேடுகிறேன்!

                       — தல்லிதாசன்

காலை மயக்கம்

சன்னல் ஒரத்தில் சீறிப்பாய்ந்த 
ஒளிக்கீற்று தட்டி எழுப்பிட
கண்விழித்தேன் காலை வந்ததென்று!

கனவில் உனக்குப் பரிசளிக்க
ரோஜா மலர்களைத் தேடினேன்
மொட்டுக்கள் தான் தட்டுப்பட்டது!

ஆனால்! மலர்களின் நறுமணம் மட்டும்
என் நொடிகளை நிரப்பிக் கொண்டிருந்தது!
சற்றே சுதாரித்து ஆகாயத்தைப் பார்த்தேன்!

அங்கு நிலவாய் நீ!
என் இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கிறாய்!
உன்விழி பட்ட என் இதயமோ!
முல்லைப் பூக்களாய் பூத்துக் கொண்டிருக்கிறது!

                                            — தல்லிதாசன்

மனிதிக்காக

நான்கு சுவற்றில் உலகம் கொண்டு
அன்பை வேண்டி அயராது உழைத்தும்!
கொள்ளைப் புறத்துக் கோவிலில்
குடியிருப்பாய் நீ!
அந்த மூன்று நாட்களில்!

கல்விக்கான உரிமை பறித்து!
வீட்டு வேலை உனக்கென்றும்
நாட்டு வேலை எனக்கென்றும்
பாகம் பிரிக்க! முடங்கிக் கிடந்தாய்
வீட்டுக்குள்ளே முக்காடு போட்டு!

கற்பென்றும் மானமென்றும்
கட்டுக் கதைகளால் வஞ்சிக்கப்பட்டாய்!
பதியின் உடலில் பாதியான பேதையே!
சதியின் பெயரால் தீயில் இறங்கினாய்!

உணர்வை இழந்து! உரிமை இழந்து!
கலாச்சாரத்தைக் காவல் காக்கிறாய்!
போதைப் பொருளாய் தீட்டுப் பொருளாய்!
பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறாய்!

மனிதியே நீ மறந்து போனாயே!
உன்னை அடிமையென்று 
கட்டியங் கூறுவதே 
இந்தக் கலாச்சாரம் என்று!

மனிதியே நீ மறந்து போனாயே!
வீட்டுக்குள்ளே உன்னை அடைத்து
பல்லிளித்து பரிகசிப்பது
இந்தப் பாரம்பரியம் என்று!

மனிதியே நீ மறந்து போனாயே!
வீரத்தின் விளைநிலத்தில்
விதையை விதைப்பவள் நீ!
பண்பாடு கலாச்சாரம் எல்லாம்
உன் பாதுகைக்கு கீழன்றோ!

மீண்டும் ஒருமுறை உறக்க சொல்வாய்!
உன்னை தீட்டாய் கருதும் கலாச்சாரம்
உலகிற்கே தீட்டு என்று!
உன்னை ஒடுக்கத் துடிக்கும் பாரம்பரியம்
உலகிற்கே கேடு என்று!

                           — தல்லிதாசன்

மனிதம் மறந்தோம்

வாத்து போல தலையறுத்து தினம்
கூத்து போல நடத்திக் காட்டுறான் - அதை
பாத்துக் கொண்டே கண்ணை மூடி
காத்து போல கடந்து போறோம்!

கத்திப் பட்ட பிஞ்சுக் கழுத்து
என்ன பாடு பட்டிருக்கும்! -அதைக்
கண்ணெதிரே கண்ட அன்னை நெஞ்சம்
என்ன துடி துடித்திருக்கும்!

காம வெறி கண்ணை மறைத்ததோ!
சாதி வெறி மனிதம் புதைத்ததோ!
நமக்கென்ன கவலை அதைப் பற்றி!

மூச்சுவிட நேரமில்லாத நமக்கு
கூச்சம் கூட துளியுமில்லை - அதனால்தான்
துச்சமாய் நினைத்து மறந்து போகிறோம்! அவன்
உச்சத்தில் நின்று கொட்டம் அடிக்கிறான்!

                                 - தல்லிதாசன்

ஒருதலை கவிதை

ஒருவரி சொல்வாய் கண்ணே என்
உயிர்வலி தீரும் இன்றே!
விழிகளில் உன்னைக் கண்டே என்
நொடிகளும் நகர்ந்தால் நன்றே!

கற்பனை கவிகள் எல்லாம் என்
நித்திரை பறிக்குது இன்று!
காதலில் விழுந்த நெஞ்சம் உன்னில்
முத்திரைப் பதிப்பது என்று?

                                — தல்லிதாசன்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

விவசாயி கடன் தள்ளுபடி

கழனியிலே கதிர் அறுத்து!
களஞ்சியத்தில் நெல் குவித்து!
தரணியின் பசி ஆற்றிய உழவன்!
இறஞ்சி நிற்கிறான் இன்று!
இரக்கம் மறந்த அரசிடம்!

கண்ணுக்கு மை இட்டு!
கழுத்துக்கு சுறுக்கு மாட்டும்
தரங்கெட்ட அரசிடம் அவர்கள்
கெஞ்சி நிற்பதோ! 
நன்றி மறந்த நமக்காக!

                            -- தல்லிதாசன்

அழுகை

அன்பெனும் மைநிரப்பி
காலக் காகிதத்தில்
காதல் கவியெழுதி! 
கனவுகளோடு தந்தேன்
உன் கரங்களில்! - 
ஆனால் நீயோ!அதை
சுயநலக் காட்டில் பறக்கவிட்டு!
என்னை!
ஆளில்லாக் காட்டில் அலையவிட்டாய்!

                         - தல்லிதாசன்

சலனம்

திரை விலகிய உன்
இடை கண்ட நாள்முதல்
இடை விடாமல் நான்
இமைமூடா இரவுகளைக் கடக்கிறேன்!

                          -- தல்லிதாசன்

புதுமை

பழைய பூமியில் புதிய வாழ்க்கை!
பழைய கீதத்தில் புதிய கானம்!
பழைய பாறையில் புதிய சிற்பம்!
பழைய பாதையில் புதிய பயணம்! -என!
கடந்து போன பழமையில் நாம்
காக்க மறந்த புதுமைகள் பல!

ஆம்!

பகுத்தறிவு பள்ளியில் தேர்ச்சி பெற்ற
பழமை கூட என்றும் புதுமையே!
தேர்ச்சிப் பெற தவறி விட்டால் 
புதுமையின் அர்த்தம்  கூட மடமையே!
                                -- தல்லிதாசன்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

நீங்காத நினைவுகளின் நிழல்களோடு நான்!
நிஜங்களைத் தேடித் தவிக்கிறேன்!
நம்நட்பின் கரங்களில் தவழ்ந்த நொடிகளில்!

தனிமை எனக்குப் புதிதல்ல! ஆனால்!
இந்த வலிகள் எனக்குப் புதிது!

வளமான வருங்காலம்
உனக்கு வருமென்றால்!
சுகம்தான் எனக்கு இந்த வலிகூட!

நறுமணம் வீசிய நம்
நட்பின் நினைவுகளோடு!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

                            -- தல்லிதாசன்

புரட்சிப் போருக்கு வா!


வெள்ளையனை விரட்டிப் பெற்ற சுதந்திரத்தை!
இந்தியனிடம் இழந்து நிற்கிறோம்!

மெல்ல சாகும் அவலம் வேண்டாம்!
கள்ள மொளனம் காக்க வேண்டாம்!

புரட்சிப் போருக்குப் புறப்பட்டு வா!
வெல்ல வேண்டும் வேகமாய் வா!

ஆம்!

வெல்ல வேண்டும் நாம்! இம்மண்ணில்
நம் சந்ததிகள் வாழ்வதற்கு!

வெல்ல வேண்டும் நாம்! இம்மண்ணில்
நம் பட்டினியைத் தடுப்பதற்கு!

வெல்ல வேண்டும் நாம்! இம்மண்ணில்
நம் வளங்களைக் காப்பதற்கு!

வெல்ல வேண்டும் நாம்! இம்மண்ணில்
நம் வரலாற்றை மீட்பதற்கு!

வெல்ல வேண்டும் நாம்! இம்மண்ணில்
நம் தமிழை வளர்ப்பதற்கு!

வெல்ல வேண்டும் நாம்! இம்மண்ணில்
நம் கலைகளை காப்பதற்கு!

வெல்ல வேண்டும் நாம்! இம்மண்ணில்
நம் சுதந்திரத்தை சுவாசிப்பதற்கு!

விரைந்து வா தோழனே!
விரையம் ஆகுது நேரமே!

                   -- தல்லிதாசன்





கனவா? கவலையா?

உன் கவலைகளை விரட்டிவிடு!
இல்லை எனில் - அது
உன் கனவுகளை விரட்டிவிடும்!

                             -- தல்லிதாசன்

திருமுருகன் காந்தி

நம் மண்ணுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் வளம்காக்க போராடியவன்
சிறையில் இருக்கையில்! 
நம் உறவுகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் உணர்வுகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!
நம் உரிமைகளுக்காக போராடியவன்
சிறையில் இருக்கையில்!

விடுதலை தினம்
கொண்டாடும் மடமை! - ஐயகோ!
தமிழ் குடிக்கு
ஏனிந்த நிலமை!
தமிழா! நீ தொலைப்பது 
எப்போது உன் அறியாமையை!

                             -- தல்லிதாசன்

அறிவீனம்

உன் வரலாறு தெரியாத வருங்காலம்
வளமாய் இருக்குமென நினைப்பது அறிவீனம்!
அந்த அறிவீனத்தை அரவணைக்க
சம்மதம் கொண்டாயோ தமிழா???

                      -- தல்லிதாசன்

அன்பின் ஆழம்

உன்னைப் போலவே நானும்
உறங்க முடியாமல் தவிக்கிறேன்!

உன்விழி கடந்த கண்ணீர் 
என் கன்னங்களையும் நனைப்பதால்!

                            -- செல்வராஜ்

புரட்சிப் போருக்கு வா!

உன்வீட்டில் உலை கொதிக்க
உழவன் அங்கே சாலையில் உருளுகிறான்!

உன்வளம் காக்க போராடும்
உத்தமன் அங்கே சிறையில் உழலுகின்றான்!

மாணவச் செல்வங்கள்  மருத்துவர் 
கனவுகளைக் கண்ணீரில் கழுவுகிறார்கள்!

தன்னை மட்டுமல்ல உன்னையும்
நாம்பிறந்த மண்ணையும் காக்கத்தான்!

கதிரா மங்கலத்திலும் நெடுவாசலிலும்
மாதக்கணக்கில் மக்கள் போராடுகிறார்கள்!

வெள்ளைநூலில் காவிக் கொடி பறக்க
நம்உரிமைகளை காவு வாங்குகிறார்கள்!

சீறிவரும் காளை அடக்க
சீறிப்பாய்ந்த தமிழ் இனமே!

ஆர்ப்பரித்த அலைகடலும் அமைதியான 
உன் ஆக்ரோஷம் எங்கே?

விண்ணொளியும் மின்னொளியும் மறைந்து போனபோதும்
பொன்னாளி வீசிய அலைபேசி எங்கே!

சாதிமதம் பாராமல் சமத்துவமாய் நின்று
சமர் செய்த வீரம் எங்கே?

புரட்சிக்கு புதுவதிகள் எழுதி! வெற்றிக்கனியை
எட்டிப்பறித்த உன் விவேகம் எங்கே?

தரணி வியந்த தைப் புரட்சியின்
வெற்றிச் சரித்திரத்தை!

நீ! மறந்துபோன வரலாற்றின் வரிசையில்
சேர்க்கத் துணிந்தாயோ தமிழா?!

உன்உரிமை காக்க எழுந்து வா! - புது
உலகம் படைப்போம் துணிந்து வா!

காலம் கரைகிறது தமிழனே!
தாமதம் செய்யாமல் விரைந்து வா!

                               -- தல்லிதாசன்











மருத்துவர் அனிதா

உன்கனவுகளைக் கண்ணீரில் கழுவினால்!
மக்கள் மனதில் இறந்துபோன வீரத்திற்கு!
உதவாத உரமாகுமே என்றெண்ணி!

புதுப் புரட்சிக்கு
உன் உயிரை வித்தாக்கி! - அதற்கு
உரமாய் உன்உதிரம் வார்த்தாயோ!
வீர ம(த)ங்கையே!

                            -- தல்லிதாசன்

பிச்சை

இதயம் திறந்து உறவைத் தேடினேன்!
இமைகள் மூடி உறக்கம் தேடினேன்!
இரண்டுமே எனக்கு எட்டாக் கனியானது!

கற்பனைகள் இல்லாத கனவுகாண ஆசை!
எதிர்பார்ப்பு இல்லாத எதார்த்திற்கு ஆசை!

ஆனால்!

ஆசைகள் கூட என்னை 
அரவணைக்க வில்லை! காரணம்!
அன்பை அள்ளித் தந்துவிட்டு!
அனாதையாய் நிற்கும் ஏழை நான்!

இறக்க மனமின்றி பிச்சை
கேட்கிறேன்! உன் அன்பை!
                             - தல்லிதாசன்

புரட்சிப் போருக்கு வா!

உழைப்புக்குக் கூலியை
பிச்சையாய் இட்ட பார்ப்பனியம்!

குழந்தைக்கு பாலூட்டும்
முலைக்கு வரிவிதித்த பார்ப்பனியம்!

அடிமை நாமென்று
அனுதினமும் கூவும் பார்ப்பனியம்!

அறிவுதரும் கல்வியை
நம்மிடம் பறித்த பார்ப்பனியம்!

வேதபாடம் கேட்டகாதில்
ஈயம் ஊற்றிய பார்ப்பனியம்!

மனித நேயம் கலக்காத
மனுதர்மம் காக்கும் பார்ப்பனியம்!

உனக்கு உதவுமென்று
உள்ளம் கொண்டாயோ மூடனே!

நமக்கு கல்விதந்த சட்டத்தின்
குரல்நெறிக்கும் சதி நடக்கிறது!

தரமென்றும் தகுதியென்றும் கூறி
நம்உரிமை பறிக்கசதி நடக்கிறது!

மீண்டும் உனக்கு அடிமை
விலங்கிட சதி நடக்கிறது!

சதிகாரர்களின் சட்டங்கள் இங்கே!
நம்மீது தொடுக்கும் போர்! 

வீதிக்கு வராமலே உன்தோல்வியை
ஒப்புக்கொள்ள விருப்பமா! - அல்லது!

ஆயுதமில்லாப் புரட்சிப் போரிட்டு
வெற்றி வாகைசூட விருப்பமா?

ஒன்றை மட்டும் மறவாதே!
நீ!போராட மறுத்து விட்டால்
கல்வியென்பதே கனவாகிப் போகும்!
எனக்கல்ல! உன் சந்ததிகளுக்கு!

                                        - தல்லிதாசன்

புரியாத புதிர்

விடியாத இரவுகள்!
விலகாத கனவுகள்!
புரியாத உறவுகள்!
மடியாத உணர்வுகள்!
தெரியாத பாதைகள்!
முடியாத பயணங்கள்!
விடைதேடும் வினாக்களா? இல்லை!
வினாதேடிய விடைகளா? என்றறிய!

பிரியாத கடிதத்தில்!
தெளியாத சிந்தனைகளில்!
சிதறாத நினைவுகளில்!
உதவாத கற்பனைகளில்!
எழுதாத எழுத்துக்களில்!
அறியாத செய்தியைத் தேடுகிறேன்!

அதைத் தேடுகையில் ஏனோ!
உறக்கம் எந்தன் உறவை முறித்தது!

                             -- தல்லிதாசன்

காலத்தின் விருப்பம்

என் கற்பனை சிப்பிக்குள்
பிறக்கும் முத்துக்களை!
இழக்க மனமின்றி! - காலம்!
என் கண்ணீரைத் துடைக்க
மறுக்கிறது போலும்!

                              — தல்லிதாசன் 

நாடு

இந்தியா என்றொரு நாடு!
அது நாடல்ல நாடல்ல நல்லா நீ கேளு!
வெள்ளையன் போட்டானொரு கோடு!
அந்த கோட்டுக்குள் தவிக்குது சுயமான நாடு!

                              — தல்லிதாசன்

துளிகள்

உடலின் இயக்கம் உயிரானது போல்- இங்கே
இயற்கையின் இயக்கம் கடவுளானது!

கருவறைக் கல்லதும் தெய்வமாம் - இங்கே
கழிவறைப் பேணும் குப்பனோ குப்பையாம்!

நம்!ஆதி அழத்து புதுஅந்தம் புனைந்து
ஆளத் துடிக்கிறது ஆரியக் கூட்டம்!

புரிதல் இல்லாத உறவுகளால் - அன்பெனும்
குழந்தை அனாதை ஆக்கப் படுகிறது!

உணர்வோடு வாழ்பவன் மனிதன் ஆகிறான்!
உண்ர்வுகள் ஆள்பவன் மிருகம் ஆகிறான்!

வஞ்சப் புகழ்ச்சிப் பாடி! போர்மேகம்
கலைத்த ஔவை வளர்த்தது  எம்தமிழ்!

தனிமனிதத் தேவைதான் ஓயாமல் சுழலும்
காலச் சக்கரத்தின் ஆதார அச்சாணி!

நேசம் மறந்த உறவின் பாசமது!
தழும்பில் துளிர்க்க முடியா கேசம்!

மனமடக்க மறுத்து! மடமையைத் துறந்துவிடு!
மனமாளத் துணிந்து! உலகத்தை வென்றுவிடு! 

உன்போல் உறவென் உயிரில் கலந்தால்!
உலகம் எனக்கு உற்சாக உறைவிடம்!

மாறாத புன்னகை வேண்டுமா? மதியேற்கும்
மாற்றங்களைப் பழகிக் கொள்!

                     -- தல்லிதாசன்

உன் நினைவுகள்

கூடிக் களித்திருக்க
கோடி பேர் வந்தாலும்!
 உள்ளன்பு கொண்டவர்
உனைப் போல் யாரிங்கே!

கரைகின்ற காலத்திலும்
வளர்கின்ற மதிபோல்!
கலையாத கோலத்தில்
மங்காத வண்ணமாய்
நினைவுகள் தந்தவளே!

நீயிருந்த காலம் வரை!
இருள் என்னை சூழ்ந்ததில்லை!
இன்றோ!
இருள்சூழ்ந்த உலகில்
உன்னையும் என்னையும் தேடுகிறேன்!
நீதந்த விளக்கின் துணையோடு!

ஆம்!
எனக்கு இன்றும் வழிகாட்டுவது
உன் நினைவுகள் மட்டுமே!

                                 — தல்லிதாசன்

தனிமையின் மொழிபெயர்ப்பு

தனிமையின் மொழிபெயர்ப்பில்
இனிமை மட்டுமல்ல
என்னையே நான் கண்டேன்!

ஆம்!

நான் தேர்ந்தெடுத்த மொழி!
கவிதை!

                         - தல்லிதாசன்

தூக்கியெறிவோம் போலி தேசத்தை

கடலில் வீசிய புயல்!
மண்ணில் இட்டது மழையை! எங்கள்!
நெஞ்சில் நிறைத்தது துயரை!

கைகட்டி வாய்ப்பொத்தி 
கல்லாய் நிற்கிறது
கையாலாகாத மாநில அரசு!

ஈழத்தில் நடத்திய
இனப்படு கொலையை!
இங்கேயும் நடத்திட
முனைந்து விட்டது மத்திய அரசு!

ஆம்!

விண்ணை முட்டும் ஊர்திகள்!
பிரம்மாண்டக் கப்பல்கள்!
எதுவும் வரவில்லை!
என் சகோதரனைத் காக்க!

மீத்தேன் தேட 
முண்டியடித்த அறிவியலும்!
எம்மீனவனைத் தேட 
முனைப்புக் காட்டவில்லை!

அணுவைப் பிளக்க 
அவசரம் காட்டிய அரசும்!
எம்மீனவன் எழுப்பும்
மரண ஓலத்தை மதிக்கவில்லை!

அன்னியச் செலவாணியை
அள்ளிக் கொடுத்த கரங்கள்!
ஆழியின் நடுவே
ஆதரவு கேட்டு தவிக்கின்றன!
நன்றிகெட்ட அரசிடம்!

விழித்துக் கொள் தமிழா!
சரியான முன்னறிவிப்பும் இல்லை!
நம்சகோதரனைத் தேட
முனைப்பும் இல்லை!

இன்னுமா புரியவில்லை
இது!
இனப்படு கொலை என்று!

இந்தப் போலி தேசத்திற்கு 
நம் பணம்தான் தேவை!
போலி தேச பக்தர்களுக்கு
நம் உயிர்தான் தேவை!

தூக்கியெறிய துணிவுகொள் தமிழா!
போலி தேசபக்தர்களை மட்டுமல்ல!
இந்தப் போலி தேசத்தையும்!

அப்பொழுதுதான் 
வாழ்வோம் நாம்!
வரலாற்றில் மட்டுமல்ல!
வருங் காலத்திலும்!

                                 — தல்லிதாசன்


பெயர்ச்சொல்

என்னுள் பல
வினைகள் புரிகின்றன!
உன் பெயர்ச்சொல்!

                 — தல்லிதாசன்

கூசிய தேசபக்தி

கண்ணீரால் மை நிரப்பி
வறண்ட மண்ணில் மனுஎழுதி!
வறட்சி நிவாரணம் கேட்டோம்!

ஆனால் நீயோ!
அம்பானியின் வர்த்தகத்திற்கு
விளம்பரத் தூதனானாய்!

அதனால் நாங்களும்
விளம்பரத் தூதரானோம்!
பூச்சிமருந்தின் வீரியத்திற்கு!

கல்விக்கு கடிவாளமிட்டு! 
எங்கள் கனவுகளுக்கு
நீ!குழி பறிக்கையில்!

சட்டத்தின் ஒளியில்
குழிமூட முயற்சித்தோம்! 
சட்டம் ஏழைகளுக்கு என்றுமே
விட்டில் பூச்சியென அறியாது!

அப்போதும் நீ!
வானூர்திக்கு முத்தமிட்டாய்!
அதனால் என்தங்கை
தூக்குக் கயிறுக்கு முத்தமிட்டாள்!

அயலவன் சுடுகையில்
பாதுகாப்பு கேட்டு!
கண்ணீர் மல்க நின்றோம்!
நீயோ!
எம்மைக் காக்க மறுத்து
அவன் துப்பாக்கிக்கு 
தோட்டா வழங்கினாய்!

புயலோடு கடலோடிய
எம்மீனவ சகோதரன்
அபயக் குரல்எழுப்பி 
ஆழியில் தவிக்கிறான்!

இப்போதும் நீ!
ஆட்சிப் பிடிக்க அலைகிறாய்!
என் சகோதரனோ!
மூச்சை இழந்து மிதக்கிறான்!

எங்கள் மீனவனின்
செந்நீர் குடிப்பது
மாற்றான் நாட்டு
செந்நாய்கள் என்றிருந்தோம்!

இப்போதுதான் புரிகிறது!அது!
எங்கள் கொல்லைப் புறத்தில்
குடியிருக்கும் உண்மை!

காவி வெறிபிடித்த
மனித மிருகங்களே!
எம்மீனவனின் செங்குருதி கலந்து!
காவியாய் மாறிநிற்கும் நீலக்கடலை!
நன்றாய்ப் பாருங்கள்!

அந்தக் குருதிகுடித்து 
பறைசாற்றுங்கள் உங்களின்
தேசபக்தியை! ஆம்!
வீசிய புயலில்
கூசி நிற்கிறது 
எங்களின் தேசபக்தி!

                            — தல்லிதாசன் 






சட்டம் யார் கையில்???



நீயும் நானும்
உரிமை வாளெடுக்கத் 
தயங்கும் வரை!
சட்டத்தின் சல்லாபம்
சதிகாரர்களின் சட்டைப் பையில்!

உரிமை வாளெடுத்து! நாம்!
போராடத் துணிந்து விட்டால்!
கைகளில் தவழ மறுத்து! நம்
பாதங்களை தொழுது நிற்கும்!
இந்தச் சட்டம்!

                          — தல்லிதாசன்