செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

இரவுகள்

இரவுக்கும் பகலுக்கும்
இடைபட்ட தூரத்தை!
கனவுகளில் கடக்க விரும்புகிறேன்!
ஆனால்! அது!
கண்ணீரில் கரைகிறது!

                              -- தல்லிதாசன் 

இமைகளின் உறக்கம்

விலகாத இமைகள்!
விழிகளுக்குத்தான் பாரம்!
கனத்துப் போன இதயங்களுக்கு!
அவை!
இதமான இரும்புத் திரைகள்!

                          -- தல்லிதாசன்  

என் தேடல்கள்

முடியாத பயணங்களைத்
தொடராத விடியலைத்
தேடுகிறேன் நான்!

அந்த விடியல் பொழுதில்!
நிறம்மாறா நீலக் கடலைத்!
தேடுகிறேன் நான்!

அந்தக் கடலின் கரையோரம்!
பதியாத பாதச் சுவடுகளைத்
தேடுகிறேன் நான்!

அந்தப் பாதச் சுவடுகளின்
தடம் போகும் பாதையைத்
தேடுகிறேன் நான்!

அந்தப் பாதையில் தொடங்கிய
பயணத்தின் முடிவினைத்
தேடுகிறேன் நான்!

ஆம்!

முடியாத பயணங்களைத்
தொடராத விடியலைத்
தேடுகிறேன் நான்!

                            -- தல்லிதாசன்


பனிமழை

சிதறிடும் பனிமேகம்! அதை
விதைத்திடும் குளிர்காலம்!
பூமி மேலே புதிதாய் ஒரு வானம்!
கேணி போலே பொறை தீர்க்கும் தாகம்!


                                -- தல்லிதாசன்

குறிப்பு:
பொறை - உலகம்    

முகமூடி

காத்தப் போலக்
கரையும் நெஞ்சில்!
வார்த்த இல்ல! என் 
வலியச் சொல்ல!

இதழ்கள் பூக்க!
இதயம் வெடிக்கும்!
உலகின் மேடை! அதில்
உயர்வாய் நடிக்க!

                           -- தல்லிதாசன்




ஆசை

இந்த உடலைத் துறந்த உயிரோடு
உலகில் வாழ ஆசை!
                          -- தல்லிதாசன்

பாட்டு

புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு!
துள்ளி நானும் போகையிலே!
ஒத்தையடிப் பாதையில உன்னைக் கண்டேனே!
ஓரக்கண்ணில் உன்னப் பாத்து ஏங்கி நின்னேனே!

மல்லு வேட்டி கட்டிக்கிட்டு!
முள்ளு மீசை வச்சிக்கிட்டு!
ஒத்த பீடி பத்தவைக்க போற மச்சானே!
இந்த 
ஒத்த ரோசா ஏங்கிநிக்குது பாரு மச்சானே!



                                    -- தல்லிதாசன் 

நிலவா?? பகலா??

பகலை விரும்பும் 
நிலவின் வாழ்வில்!
மூன்றாம் பிறையும் இல்லை!
முழு நிலவும் இல்லை!

                            -- தல்லிதாசன்  

கண்ணீர்

உன் கண்ணீரில் கரைவது!
உன் நம்பிக்கை மட்டுமே!
உன் கஷ்டங்கள் இல்லை!

                           -- தல்லிதாசன் 

பாட்டு

பொட்டிக்கடை ஓரத்திலே!
பொட்டப்புள்ள உன்னைக் கண்டு!
உச்சந்தலை உள்ளுக்குள்ள!
உருளுதடி உறுமி மேளம்!

தொட்டு நீயும் வச்சிக்கிட்ட!
பொட்டுக்குள்ள ஒளிஞ்சிக் கிட!
நெஞ்சுக்குழிப் பக்கத்துல!
பஞ்சுமுடி பத்தியம் பேணும்!

ஊருசனம் உறங்குதடி!
உச்சிநிலா வெளிச்சத்துல!
ஒரலுக்குள்ள உலக்க போட
ஒத்தாசைக்கு வாயேன் புள்ள!



                                 -- தல்லிதாசன்  

இருளும் ஒளியும்

இருளின் பிடியில்!
ஒளியின் துளிகள்!
அதில் கரைந்து போவதோ!
நிழலின் மொழிகள்!

                 -- தல்லிதாசன் 

ஆசை

மிருகங்கள் இல்லாத உலகில்!
ஒரு நிமிடம்!
ஒரே நிமிடம்!
மனிதனாய் வாழ்ந்திட ஆசை!

                              -- தல்லிதாசன்

மோட்ச முத்தம்

முடியாத முதல்  முத்தம்!
முழுதாக வேண்டுகிறேன்!

அடிக்கடி தரும் முத்தம்!
கொஞ்சம் அழுக்காக வேண்டுகிறேன்!

இவை இரண்டும் 
உன்னால் முடியாதென்றால்!
ஒற்றை முத்தம் வேண்டுகிறேன்!

பெண்ணே!

உன்மூச்சுக் காற்றில்!
என்னை எரிக்கும்!
மோட்ச முத்தம் வேண்டுகிறேன்!



                               -- தல்லிதாசன்

ரசனை

இரவின் ஒலியை!
ஒளியில் ரசிக்க!
உதிக்காத சூரியனை!
உனக்காக எழுப்புவேன்!

உனைச் சூழ்ந்த விண்மீனை!
இதழோரம் சிறை பிடிப்பேன்!
சிறைபிடித்த விண்மீனை! உன்!
இடையோரம் பிரதி எடுப்பேன்!

                               — தல்லிதாசன் 

சூரியன்

மாலை நிலா! மன்றம் வந்தால்!
அந்தச் சூரியன் நாணுமே!

உன்னைக் கண்டு! நாணம் கொள்ளும்!
சூரியன் நானம்மா!

                        — தல்லிதாசன்

கோவில்

கலைப் பொருளுக்கு!
கடவுள் என்று விலைஒட்டி!
விற்க முயலும் சந்தை!

                     — தல்லிதாசன்

மனிதா! மனிதா! விழித்து விடு!

பொறுத்தது போதும் தமிழா!
நீ பொறுமை விடு!
நாம் அடிமைகள் இல்லை என்றே!
முழக்கம் இடு!
உறவுகள் கண்ணீர்த் துடைக்க!
நீ கரத்தை எடு!
உரிமைப் போரை வென்று! புது
சிகரம் தொடு!

அறங்கள் சூழ்ந்த! அழகிய நாட்டை!
அண்டிய மிருகக் கூட்டம்!
நம்மனதின் குகையில்! மதத்தைப் பூட்டி!
போடுது இங்கே ஆட்டம்!

சிலையின் காதில்! சொல்லிவிட்டால்! உன்
வீட்டில் உலைதான் கொதித்திடுமா?
பிறையைப் பார்த்து தொழுதுவிட்டால்! உன்
வாழ்வின் பிழைகள் மறைந்திடுமா?

மனிதா! மனிதா! விழித்து விடு!
மதத்தைத் தூக்கி எறிந்து விடு!

                                — தல்லிதாசன் 






எது கடவுள்??

கடவுள் என்னும் கற்பனை கூட!
உயிர்பெற்றால் சொல்லும் இன்று!

மனிதம் ஒன்றே கடவுள் என்று!
மதங்கள் எல்லாம் சதிகள் என்று!

                     — தல்லிதாசன்  

பரிதாபம்

ஒரு வானவில் தீட்டினேன்!
என் வாழ்வின் 
வண்ணங்கள் சேர்த்து!
வானவில் தீட்டினேன்!

அதை வானத்தில் பூட்டினேன்!
என் சோகத்தின்
மேகங்கள் சூழ்ந்த!
வானத்தில் பூட்டினேன்!

வானவில்லின் வண்ணம் பார்த்து!
வாழ்வை மாற்ற!
விடியல் அழைக்கிறது!

சோகத்தின் மேகங்கள்! தன்
தாகத்தைத் தீர்க்க!
என்னைக் குடிக்கிறது!

                         — தல்லிதாசன்  

காதலின் காரணம்

காதலின் வேதனை!
அதன் காரணம் தேடினேன்!
காற்றில் காண்கிறேன்!
அந்தக் காயத்தின் வேரினை!

நடனம் பழகும்
அவள் கூந்தலில்
பிறந்திடும் பூங்காற்றா!
அவள் வீசிடும் பார்வையில்
புறப்படும் புயலா?
அவள் பேசிடும் மொழியில்!
வீசிடும் தென்றலா?
எந்தக் காற்றை ஏவிவிட்டு
என்னைக் கொல்ல எத்தனித்தாள்!
என்று குழம்பி நிற்கையில்!

மொட்டவிழ்த்து பூத்து நின்ற
புதுமுல்லையின் வாசம்! என்!
நாசிதொட்டு சொன்னது!
அது!
என் இளமைச் சாரலை!
தழுவி வரும் வாடைக் காற்றென்று!



                           — தல்லிதாசன்

காதலே!.... காதலே!...

உடலுக்குள் பெருகும்!
உதிரத்தின் துளியை!
உறவாய் வருடும்!
உயிர் தானிந்தக் காதல்!

துளியென விழுந்தாலும்!
உளியென உருமாறி!
உன்னை செதுக்கும்!
கலை தானிந்தக் காதல்!

இது!
கடலைக் குடித்தாலும்!
அடங்காதொரு தாகம்!



                       — தல்லிதாசன்  

இயற்கையின் செருக்கு!

பாறைகளின் இடுக்கில்
வேர்விட்ட செடி!
இது!
பாறையின் இழுக்கா?
செடியின் மிடுக்கா??
இரண்டும் இல்லை! இது!
இயற்கையின் செருக்கு!

                          — தல்லிதாசன்

பிரிவு

உடலும் உயிரும் உறவின்றித் தவிக்க!
உள்ளம் ஏனோ உலைபோல் கொதிக்க!
உலகின் உறவை உதறிட நினைக்கிறேன்!
உடனே விடத்தைப் பருகிடத் துடிக்கிறேன்!

                             — தல்லிதாசன் 

காதலும் காமமும்

வேணாமுன்னு சொல்லச் சொல்ல!
வேலியத் தாண்டுது காத்து!
காவலுக்கு கட்டிய சேலை!
காட்டுது பாரு கூத்து!
என்பார்வையில பட்ட பழம்
பவளமானது நேத்து!
பாய்விரிச்சி பந்தியைப் போட்டு!
பசியை கொஞ்சம் ஆத்து!
அந்த பவளப் பழத்த சேத்து!



                                — தல்லிதாசன் 

விடியலைத் தேடி

விடியலைத் தேடி! ஒரு பயணம் போகலாம்!
விடுதலை வேட்கை! அதை மூச்சாய் இழுக்கலாம்!
மடிந்திட்ட மனிதம்! அதன் வேரைத் தேடலாம்!
மறந்திட்ட அறத்தில் புது ரத்தம் பாய்ச்சலாம்!

தமிழா! நீ எழுவாய்!
செந்தனலாய் பகை எரிப்பாய்!

வரலாற்றை மறந்தோம்! எனும்
வரலாற்றுப் பிழையை!
வரிக்காதே வடுவாய்! நாம்
மறைவோமே மடுவாய்!

                             — தல்லிதாசன்

காதலும் காமமும்

கதகதன்னு தினமும் எனக்கு கனவு வருகுதே!
கலகலன்னு உன்சிரிப்பு அதுல கேட்குதே!
சிலுசிலுனு வீசும் காத்து மனசப் பிணையுதே!
மலமலன்னு மடியில் வாடி நிலவு மறையுதே!

                                 — தல்லிதாசன் காதலும் காமமும் 

மறுவார்த்தை பேசாதே

உளராத ஒரு வாக்கியம்!
உனைப் பார்த்து நான் பேசிட!
உறங்காமல் பயின்றேனே!
உனைப் பார்த்ததும் மறந்தேனே!
                
மழைமேகம் சேராமலே!
இடிகூட கேட்காமலே!
ஒரு மின்னல் வீசுதே!
உன் பார்வை பேச்சிலே!

                     — தல்லிதாசன்  

கார்காலம்

நீலவானின் மானம் காக்க!
துகில் போர்த்தும் முகில் கூட்டம்!
வானவில்லாய் சேலை நெய்ய! 
துகில் உரிக்கும் மழையின் வேகம்!
இரண்டும் சேர்ந்து!
பகலைத் திருடி! 
பல்லவி பாடுகின்றன! கார்காலமாய்!

                                — தல்லிதாசன் 

தனிமை

ஊமையின் கனவு! அதன்!
புகலிடம் தனிமை!

அங்கே!

இரவினில் வெளிச்சம்! அது!
இளமைக்குக் கொடுமை!

                              — தல்லிதாசன்

காதலும் காமமும்

ஊதக்காத்து வீசயிலே!
உன் மூச்சுக்காத்து காவலடி!
தேகங்கொஞ்சம் கூசயிலே!
வியர்வைக் குளியல் போதுமடி!

முத்தங்கள் கேட்காத 
இதழ்கள் இல்லை!
முடியாமல் தொடர்கின்ற
பசிதான் தொல்லை!

                              — தல்லிதாசன் 

அன்பின் அளவுகோல்

வளமையோ! வறுமையோ!
அன்பின் அளவுகோல்! என்றுமே!
சந்தோசம் மட்டுமே!

                      — தல்லிதாசன்

அடங்காத அலையோசை


அன்றொரு நாள்!
அவள் நடந்த பாதத் தடத்தை!


அடங்காத ஆசையோடும்!
குறையாத ஓசையோடும்!
இன்றும் முத்தமிடும்!
வங்கக் கடலின்! வெள்ளை அலைகளே!
சற்றே ஓய்வு கொள்ளுங்கள்!
ஆர்ப்பரிக்கும் உங்கள் அலையோசையால்
அவள் ஆடைபேசும் கீச்சொலிகள்!
கேட்கவில்லை எனக்கு!

                                 — தல்லிதாசன் 

காதல்

மடியில் தவழும் மழலையென!
மனதில் தவழும் காதலினால்!
உதயம் மறந்த சூரியனாய்!
உலகம் மறந்து போகிறேன் நான்!

                         — தல்லிதாசன்  

நினைவுகள்

அதோ!
அந்த நீலவானத்தை
முத்தமிட துடிக்கும்!
இந்த நீலக்கடலின்!
ஈர மணலில்!
தனியே ஓர் பயணம்!
உன்நினைவுகளை முத்தமிட்டபடி!

                          — தல்லிதாசன் 

வலி

மறந்திடத் துணிந்தாய்!
எனைக் கனவாய் நினைத்து!
இறந்திட மறந்தேன்!
நான்! உனையே நினைத்து!

                       — தல்லிதாசன்  

காதல்

மூச்சைத் தீண்டிடும் வாசனை புரிந்ததும்!
உயிரிலே ஒருசுகம் பெருகுதே! நொடியிலே!

அருகில் நீ வருகிறாய்!
சிறகுகள் முளைக்குதே!
பார்வையை வீசினாய்!
புயலிலே பறக்கிறேன்!

இணையாத இதழ்கள்!
இணைக்கின்ற சொல்லை!
இதழோடு பேசி! 
கொல்வாய் என்னை!

                    — தல்லிதாசன்  

கண்ணீர்ப் பிரதி

என் எழுதுகோல் வடிக்கும்
ஆனந்தக் கண்ணீரில்
பிரதி எடுத்தேன்! 
அவள் திருடிச்சென்ற 
என் இதயத்தின் பிம்பத்தை!

                         — தல்லிதாசன்  

காதல்

மண்ணோடு பிறந்தது முதலே!
என்னோடு வளர்ந்திட்ட கனவே!
உன்னோடு ஒருமுறை சேர!
கண்ணோடு காதலைக் கலந்தேன்!

                          — தல்லிதாசன் 

உறவு

உறங்கா விழிகளின் உறவு!
ஒன்று கனவோடு!
இல்லையென்றால் கண்ணீரோடு!
என் விழிகளின் உறவு!
என்றுமே உன்னோடு!

                    — தல்லிதாசன்

காதல்

நெஞ்சோடு தீயை மூட்டி!
கண்ணோடு நீரை கூட்டி!
புதிதாக வித்தை செய்தாய்!
புயல்வீசி பூவைக் கொய்தாய்!

பெண்ணென்ற பிம்பம் கொண்டு!
விழிவாளில் கொலைகள் செய்து!
உயிரோடு நரகம் தந்தாய்!
கனவாக என்னை கலைத்து!

                        — தல்லிதாசன் 

ஊடல்

தூரத்துல உன்னை வச்சி!
தூக்கத்த நான் தள்ளி வச்சேன்!
உன் நினப்ப அள்ளி வச்சு!
என் மனச முள்ளில் தச்சேன்!



                            — தல்லிதாசன்  

என்னுடைய தேடல்


அலைபேசி மணி விடுத்து!
அறைகூவும் சேவலின் குரலில்!
என் விடியலைத் தேடுகிறேன்!

சுவர்அடைத்த அறை விடுத்து!
அலைமோதும் குளக் கரையில்!
என் குளியலைத் தேடுகிறேன்!

வாகன நெரிசலின் இரைச்சலை விடுத்து!
குயில்களின் கானத்தில்! 
என் பள்ளிச்சாலையின் வாசலைத் தேடுகிறேன்!

வகுப்பறையின் மேசை விடுத்து!
ஆலமரத்தின் பரந்த நிழலில்!
காக்கைகளின் பசியாற்றும்! அந்த!
மதிய உணவுவேளையைத் தேடுகிறேன்!

கைப்பேசி விளையாட்டு விடுத்து!
மாலை நேரத்து மஞ்சள் வெயிலில்!
பச்சைக் குதிரை தாண்டுகையில்! வழிந்தோடும்!
என் வியர்வையைத் தேடுகிறேன்!

தொலைக்காட்சி நிகழ்ச்சி விடுத்து!
வீட்டு முற்றத்தில்! சொந்தங்களின் சங்கமத்தில்!
என் கூட்டாஞ்சோறைத் தேடுகிறேன்!

குளிர்சாதன அறை விடுத்து!
வேப்ப மரத்தடியில்! கயிற்றுக் கட்டிலில்!
வானத்து நிலவை ரசிக்கும்!
என் உறக்கத்தைத் தேடுகிறேன்!

உணர்வின்றி உறங்கிய நாட்களில்!
நாம் இழந்த இயற்கையை மீட்டெடுக்க!
புத்தி விழிப்போடு! புரட்சி விடியலைத் தேடுகிறேன்!

                                   — தல்லிதாசன்



உலகின் அச்சாணி

தேவைகளின் அச்சாணியில் சுழலும் உலகம்!
சில நல்ல உள்ளங்களின் தேடலினால்தான்
இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது!

                             — தல்லிதாசன் 

காதல்

மெதுவா! மெதுவா! உன் விழிகள் பார்க்குதே!
அடியே! அடியே! அந்த மின்னல் தோற்குதே!
பனியாய்! பனியாய்! ஒரு உள்ளம் உருகுதே!
விதையாய்! விதையாய்! அதில் காதல் முளைக்குதே!

                                  — தல்லிதாசன்

அழகின் தரிசனம்

தென்றலின் முத்தத்தில்
நாணம்விட்டு உடைஅவிழ்த்து
பூத்து நிற்கும் மொட்டுக்கள்!

பச்சைப் புல்வெளியில்
படர்ந்த பனித்துளியில்!
தன்முகம் பார்க்க
எட்டிப் பார்க்கும் இளஞ்சூரியன்!

கருங்குயில்களின் கான மழை!
சிட்டுக் குருவிகளின்
கீச்சுக் குரல்கள்! என்று!

கண்விழிக்கும் காலைப்
பொழுதில் அத்தனை அழகு
இந்த உலகில் கொட்டிக் கிடக்கிறது!

ஆனால்!
அத்தனை அழகும் சற்று
எட்டிதான் நிற்கிறது!
ஆம்!
உறக்கம் கலைந்து
விழிகள் திறந்து!
அரைத் தூக்கத்தில்!
கைகள் நீட்டி!
என்னவள் சோம்பல் முறிக்கும் அழகுக்கு!
இணையாக முடியாத வருத்தத்தில்!
சற்று எட்டிதான் நிற்கின்றன!

அந்த அழகைக் காண தவிக்கும்
உலகே! சற்று பொறுமைகொள்!
அவள் நித்திரை கலைக்கும் வரை!
ஆம்!
என்னவள் உறங்குகிறாள்!
என் நினைவுகளோடு!

                                — தல்லிதாசன் 



அன்பே! பேரன்பே!

என்னோடு உன்வாசம் புதிதாகத் தெரிகிறதே!
என் உடலோடு நீ செய்த 
காயங்கள் எரிகிறதே!
பேரின்பம்!
அதில் மூழ்கி!
நீ காயம் ஆற்றும் கலைகள் ரசிக்கிறேன்!
மீண்டும்! இது போல!
பல காயம் வேண்டினேன்!

                            — தல்லிதாசன்  

காதல்

மழைச்சாரல் மனதோடு பேசுதே!
மனமெங்கும் உன்வாசம் வீசுதே!

துளியாக என் காதல் கூடுதே!
அறியாத ஒரு ஆசை சேருதே!

                          — தல்லிதாசன் 

அறியாமை

உன் பிம்பம் எதுவென்று!
நான்! தேடி அலைகிறேன்!
என் கண்ணின் ஒளியென்று!
புரியாமல் திரிகிறேன்!

                    — தல்லிதாசன் 

காதல்

இரவெல்லாம் மௌனம் பேச!
பகலெல்லாம் நினைவுகள் பேச!
பறந்தேனே சிறகுகள் இன்றி!
அகிலத்தின் எல்லைகள் தாண்டி!

                                — தல்லிதாசன்   

காதல்

என்காதில் கேட்கிறதே! இது உந்தன் பெயரா?
உன்வாசல் வருகிறதே! அது எந்தன் உயிரா?

கிளையோடு பேசிடும் கிளிகள் உந்தன் உறவா?
கிளிபோல கொஞ்சிப் பேசிடு எந்தன் உறவாய்!

                          — தல்லிதாசன்  

காதல்

காதல் என்னும்
விடத்தின் ஒரு துளியை!
விடலை மனக்குழியில்
ஊற்றி விட்டாய்!

காலம் என்னும்!
என்னுலகின் உயிர் துளியை!
உனது கருவிழிக்கு
மாற்றி விட்டாய்!

                           — தல்லிதாசன்

காதல்

வெண்மதி ஓரம்
வென்பனி தூவ
வெந்தது என் இதயம்!
என் கண்ணில் உன் உதயம்!

                — தல்லிதாசன் 

அச்சம்

எங்கள் உரிமை பறித்து
உண்டு கொழுத்து! இன்று!
எங்கள் உயிர்பறிக்க ஆர்ப்பரிக்கும்!
குள்ளநரிக் கூட்டம் கண்டு!
அச்சம் தோன்றுகிறது எம்முள்!
எங்கள்! மனிதநேயம்
மரித்துப் போகுமோ என்று!

                           — தல்லிதாசன்

அன்னையின் அன்பு

எத்தனையோ நாட்கள்
ஆயிரம் குடங்களுக்கு மேல்
எனக்காக சுமந்த கால்கள்!

இன்று! ஒரே நாள்!
ஒரே ஒரு குடம்!
எனக்காக நான் சுமக்கையில்!
என் கால்கள் வலிக்குமே என்று!

தைல டப்பாவைத்
தேடும் வேகத்தை
அளவிட முனைந்து தோற்று நின்றேன்!

                         — தல்லிதாசன்


காதலின் பரிசு

துளிகள் இல்லாத மழையில் நனைகிறேன்!
வரிகள் இல்லாத மொழியில் கதைக்கிறேன்!
உளிகள் தொடாத சிலையை ரசிக்கிறேன்!
விடியல் தொடாத உலகில் தொலைகிறேன்!

                                  — தல்லிதாசன்  

காதல்

உன்னை ரசிக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னை அழகாகக் காட்டும்
மாயக் கண்ணாடிதான் காதலோ???

                             — தல்லிதாசன்  

ஒரு மணி அடித்தால்

இரவில் தெரியும் நிலவின் ஒளியில்!
உலகை ரசித்து உவகை கொள்ள!
பகலை வெறுத்து உறங்குகிறேன்! கனவோடு!
உன் நினைவோடு!

                                  — தல்லிதாசன்


காதல்

அன்பே உந்தன்
அன்பை வெல்ல!
இமைக்காத விழிகளின் மேலே
இதயத்தின் காதலை தூவி!

நீ கேட்கும் ஓவியம் வரைவேன்!
உந்தன் விழிகளிலே!

                           — தல்லிதாசன்  

ஒப்பாரி

ஒத்தப் புள்ளப் பெத்து! அதுவும்
பொட்டப் புள்ளப் பெத்து!
கஞ்சிக்கே வழியில்லாத
குடியானவன் குடிசையில!
ராணியாய் வளத்தேஞ் சாமி! எம்மவள! 
இல்ல இல்ல!
எங்க ஊரு மருத்துவச்சிய!

பத்துமைல் தூரம்தான் பள்ளிக்கூடம்!
அந்த அரசாங்க வண்டியில!
பட்டாம்பூச்சியா பறந்து போவா!
பாடம் படிக்க! 
மருத்துவச்சி ஆகணும்னு!
மனசெல்லாம் ஆச வச்சி!
இராப்பகலு பாராம படிச்சாளே!

பன்னிரண்டாப்பு பரீட்சை முடிவு வந்தப்போ!
இவளப் பாராட்ட!
பத்திரிக்ககாரக எல்லாம்!
எம்மவளத் தேடி வருகயில!
பெத்தவன் நான் பூரிச்சி
நின்னேஞ் சாமி!
பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடச்சி!
எம்மவ மருத்துவச்சி ஆயிட்டான்னு!
கனவுல மொதந்தேஞ் சாமி!

ஆனா!
சட்டுனு ஒரு சட்டம்போட்டு!
நீட்டுனு ஒரு பரீட்சை வச்சி!
பள்ளிக் கூடத்துல 
சொல்லாத பாடத்துல
கேள்வி கேட்டு!
எம்மவளோட கனவுக்கு குழி பறிச்சானுங்களே!

பிஞ்சுல இருந்தே!
நெஞ்சுல சுமந்த லட்சியக் கனவ!
பறிகொடுத்த சோகத்துல
சோறு தண்ணி உண்ணாம
சோர்ந்தே இருந்த புள்ள!
தூக்குக் கயித்த தொட்டு!
இன்னைக்கு பாடையில கிடக்காளே!

இந்த ஏழவூட்டு எழவுக்கு!
எங்க போயி நீதி கேப்பேன்!
சட்டம் போட்டு கொலை செஞ்ச
இந்த அரசாங்கத்த தண்டிக்க!
எங்க போயி சட்டம் தேடுவேன்!
சட்ட நூலிலா?
பட்ட நூலிலா? இல்லை
பட்டை நூலிலா?



                              — தல்லிதாசன்

காதல்

உன் முகவரி தேடி
உறக்கம் தொலைத்த
இரவுகள் எல்லாம்!

இன்று!

உன் உதடுகள் கூடி
உயிரைத் தொலைக்க
காத்திருக்கின்றன!

                           — தல்லிதாசன் 

காதல்

விடியும்பொழுதும் என்மடியில் உறங்கும்  என்னவளின்!
தலைக்கோத! ஆயிரம் பிறப்பெடுப்பேன் ஆண்மகனாய்!

                         — தல்லிதாசன்

உலகில் சிறந்த அழகு

உலகில் சிறந்த அழகு எதுவென்று!

காற்றிடம் கேட்டேன்! அது!
உன் மூச்சுக் காற்றைக் காட்டியது!

சோலையிடம் கேட்டேன்! அது!
உன் பார்வைபட்ட மலர்களைக் காட்டியது

அலைகளிடம் கேட்டேன்! அது!
உன் பாதம்பட்ட மண்ணைக் காட்டியது!

கண்களிடம் கேட்டேன்! அது!
உன் இதழ்களின் புன்னகையைக் காட்டியது!

ஆனால்! கண்ணாடி மட்டும்!
என் இதயத்தைக் காட்டியது!
ஆம்! அது துடிப்பது
உன் நினைவில் அல்லவா!

                            — தல்லிதாசன்

முதல் முத்தம்

என்மேல் மழைத்துளி மோதும்
ஒவ்வொரு முறையும்!
என் நினைவுகள் நனைகின்றன!
மீசைமுடிகளின் யுத்தத்தில் பிறந்த
நம் முதல் முத்தத்தால்!

                             -- தல்லிதாசன்  முத்தம் 

காதல்

விரல்கள் கோர்த்து வீதியில் நடக்கிறோம்!
உலகின் இதழ்களில் காமம் தெறிக்கிறது!
எங்கள் விழிகளில் காதல் வழிகிறது!

                              — தல்லிதாசன் 

புது முயற்சி

நே வீ பூக்கும் கூ விலே!
மா நோ நே யில்லாத தே!

                      — தல்லிதாசன்

நே - அன்பு
வீ   - மலர்
கூ   - உலகம்
மா  - பெரிய
நோ - துன்பம்
தே  - கடவுள்

புது முயற்சி 

காதல்

நான் வெயிலில் நடக்கையில்!
உனக்கு விய்ர்க்குமே என்றுதான்!
என் இதயம் நெருங்கும் 
உதிரத்தை உறையவைத்தேன் நான்!

                           — தல்லிதாசன்  

அன்புச்செல்வம்

அன்பு!
அளவில் சிறியதாயினும்
மதிப்பில் உயர்ந்தது!

ஆகையால்!
அன்பு செலுத்துவோம்!
ஆடம்பரமாய் வாழ்வோம்!

                        — தல்லிதாசன்   

தத்துவம்

கொஞ்சம் பழகிப் போனால்
இருள்  கூட விழிகளுக்கு
ஒளி கொடுக்கும்!

கொஞ்சம் அதிக மானால்
ஒளி கூட விழிகளுக்கு
இருள் கொடுக்கும்!

                           — தல்லிதாசன்  

மறுபிறப்பு

காலைப் பனியாய்
உருகும் உயிரில்!
உன்னை ஊற்றினாய்!
தடைகள் கடந்து
உலகை ரசிக்க!
என்னை மாற்றினாய்!

பொய்யாய் இதழ் பூத்தாய்!
புதிதாய் நான் பிறந்தேன்!
காற்றின் கரம் பிடித்தாய்!
மலரின் மணம் உணர்ந்தேன்!

ஒரே முறை!
மூச்சுக் காற்றை!
உரசிச் செல்லடி!

                                 — தல்லிதாசன்  மறுபிறப்பு 

காதல்

உன் அன்பில் உருகிடுவேனா?
உதட்டோரம் உறைந்திடுவேனா?
மனதோடு மழைச் சாரலும்வீச!
உன் மடிமீது உறங்கிடுவேனா?

கதை கூற மறுக்கும் இதழ்கள்!
அதைப் பேச துடிக்கும் விழிகள்!
என் விழியும் இதழும் உன் சொந்தம்!
என் துயிலும் கவியும் உன் தஞ்சம்!

விடை தேடும் கேள்விகள் என்னில்!
திரை போடும் நூலகம் உன்னில்!

                             — தல்லிதாசன்   

வாழ்வின் அர்த்தம்

என் வாழ்வின் அர்த்தம் வடித்தேன்!
உயிரற்ற வரிகளாய் அல்ல! என்!
உயிர் வாட்டும் உன் விழிகளய்!

                           — தல்லிதாசன்

அசைவம்


நெற்றி முடியை கோதிவிட்டு! அதில்
முத்தமொன்று தானிட்டு!
அடங்காத ஆசை வெள்ளத்தின்
அகரம் தொடங்கி!
இமைகளில் இதழ் பதித்து!
இதழ்களில் விரல் பதித்து!
கன்னங்களில் உதட்டு ரேகை பதித்து!
காது மடலோரம்!
நாவால் கோலமிட்டு!
தொண்டைக் குழியின் பாதைக்கு!
நாவால் ஒத்தனமிட்டு!

இன்ப ஊற்றெடுக்கும்
இரண்டு கிண்ணங்களில்!
குறையாத தேனை!
குறைவின்றி பருகி!
இளமைப் பசியாற்றி!
இடையென்னும் தடைதாண்ட
தடைபோடும் குழியின் மேல்
நாவடக்க எண்ணித்தான்!
நானும் உன்னைக் கேட்டேன்!

ஆனால்!


பின்னழகில் பேச்சடங்க!
முன்னழகில் மூச்சடங்க!
எங்குதான் நான் தொடங்க!
எங்குதான் நான் மடங்க!
புரியாமல் புலம்புகிறேன்! போதை
தெளியாமல் திணறுகிறேன்!

                                —தல்லிதாசன்  


மீட்சி

என்னையும்
என் காதலையும்!
கனவில் இருந்து
மீட்டு எடுக்க?

கவி எழுதி!
கவரத் துடிக்கிறேன்!
உன்னையும்!
உன் காதலையும்!

                             — தல்லிதாசன்  

பிறவிப் பயன்

என்னோடு ஒருமுறை பேசு!
கண்ணோடு கனவினை வீசு!

விளங்காத மௌனத்தின் மொழிகள்!
விளக்காக விண்மீன் விழிகள்!

பூவோடு பழகிடத் தானே!
இளந்தென்றல் இன்னிசை பாடும்!

உன்னோடு கலந்திடத் தானே!
உலகோடு உறவினைக் கொண்டேன்



               — தல்லிதாசன்  

ஒரு மணி அடித்தால்

கண்ணி ரண்டிரல் தீபம் ஏற்றி
காதல் என்று பெயரும் வைத்து!
கனவை மட்டும் திருடுகிறாய்! எப்போதும்!
நீ இப்போதும்!

நெஞ்சம் என்னும் கானல் கூட்டில்
தஞ்சம் வந்த காதல் சூட்டில்
உயிரின் திரிகள் எரிகிறதே! அணையாமல்!
உனை அணைக்காமல்!

                   — தல்லிதாசன்  

காதல் மொழி


உதடுகள் பேச மறுப்பதை!
உணர்வுகளாய் மொழிபெயர்த்து!
மழையின் துளியில் என்
மனதைக் கரைத்தேன்! 

எனக்காக!
ஒருமுறை நனைந்துவிடு மழையில்! அதன்
ஒவ்வொரு துளியும் கதைபேசும்!
ஒவ்வொரு கதையும் உனைப்பேசும்!

மழையின் மொழி புரியவில்லையா??
சற்றே நிமிர்ந்து! வானத்தைப் பார்!
என்வாழ்வில் நீ தீட்டிய சித்திரத்தை!
வில்லாய் வளைந்த வண்ணங்கள் பேசும்!

வண்ணங்களின் மொழியும் புரியவில்லையா?
இமைகளை மூடி உன் இதயத்தைப் பார்!
அதன்!
ஒவ்வொரு துடிப்பிலும் கலந்திருக்கும் என்
எண்ணங்கள் பேசும் மொழிகளைக் கேள்!
அப்போதுதான் புரியும்! 
உதடுகள் பேசத் துடிக்கும் உணர்வுகள்!

                               — தல்லிதாசன்  










தூது

காலை மலரின் வர்ணத்தை
விழிகள் மறந்தன!
அதன் மென்மையும்! 
விரல்களில் நிலைக்கவில்லை!

ஆனாலும்!
அதன் மௌனம் மட்டும்
இதயத்தை ஏனோ
கீறிக்கொண்டே இருக்கிறது!

காரணம் கேட்டேன்!
காதல்! என்றது தென்றல்!

என் காதலுக்கு தூது சொல்ல
தென்றலை அழைத்தேன்!
ஆனால்! அது!
தன்காதலை உன்னிடம் சொல்ல
சோலை மலர்களின் வாசத்தோடு
உன் வாசலுக்கு வந்துவிட்டது!



                              — தல்லிதாசன்   

காதலின் சாரம்

கவலை கொள்ளவும்!
கலங்கி நிற்கவும்!
அயர்ந்து தூங்கவும்!
தயங்கி பேசவும்!
நேரமில்லை எனக்கு!

காரணம்!

காதலில் கழிக்கிறேன் என் நேரத்தை!
கவிதையில் வடிக்கிறேன் அதன் சாரத்தை!

                                — தல்லிதாசன்    

காதல்

காதல் ஒருமுறை என்
கனவில் வருமென!
விழிகள் மூடி நான்
விரதம் இருக்கையில்!

இதழ்கள் கோர்த்து என்
இமைகள் நீக்கியே!
உதிரம் கூட்டினாய்! புது
உலகம் காட்டினாய்! 

                                   — தல்லிதாசன்

அழகின் சிரிப்பு

அடிக்கடி சிரிக்கிறேன்!
அழகின் இலக்கணம் உன்
அன்பில் அறிந்ததால்! கொஞ்சம்
அழகாகவும் சிரிக்கிறேன்!

                             — தல்லிதாசன் 

காதலின் பொறாமை

உலகமே அமைதியில் திளைக்கையில்!
இதயம் எரிமலையாய் வெடித்ததற்கும்!

உலகமே எரிமலையாய் வெடிக்கையில்!
இதயம் அமைதியில் திளைப்பதற்கும்!

காரணம் ஒன்று தான்!
அதுதான் காதல்!

அந்தக் காதலும் என்மேல்
பொறாமை கொள்கிறது!
என்காதல் நீ என்பதால்!
   
                                   — தல்லிதாசன்  

பெயர்ச்சொல்

உடல் என்னும் ஒரு சொல்
உயிர் என்னும் மொழியில்
ஓங்கி ஒலிக்கிறது!
உன் பெயராய்!



      — தல்லிதாசன் 

காதல்

ஆதி மனிதன்! தன்
ஆசைக் காதலை
எப்படி சொல்லி யிருப்பான்!

இதழ்களின் மொழி அறியாததால்!
இமைகளின் மொழியில் காதலைச் சொன்னானா?

காற்றோடு கலவி செய்யும்
இலைகளின் இன்னிசையில் காதலைச் சொன்னானா!

இல்லை!

ஒலியும் மொழியும் இன்றி!
இதழோடு இதழ்கோர்த்து காதலைச் சொன்னானா!

எந்த வழியில் காதலைச் சொல்லி!
இப்படி நிறைத்தான் இந்த உலகை?

தீராத குழப்பம் தீர!


சிந்தனைக் கேணியில்
வெந்தழல் ஊற்றி! சிந்திக்கிறேன்!

எந்த வழியில் காதலைச் சொல்லி
உன் இதயத்தில் என்னை 
நிறைக்கலாம் என்று!

                                   — செல்வராஜ் 

உனக்காக


மலர்வாடிய சோலையில் வான்மழை நீயல்லவா!
விழிதேடிய விடியலின் முகவரி நீயல்லவா!
உயிர் தேடி களைத்தேனே!
உனைக் கூடி பிழைத்தேனே! கானலாய்!

வெண்மேகமே வெண்மேகமே
வெட்கம் விட்டு வந்தால் என்ன?
கண்ணாளனே கண்ணாளனே
கண்ணால் காதல் சொன்னால் என்ன?

இடைவெளி நம்மில் இருக்குதா?
என்னில் காண்கிறேன் உனையே!
விலகிட நெஞ்சம் நினைக்குமா?
உயிர் தேடுதே உனையே!

ஒருமுறை இதழ்கள் கோர்க்கவே! என்
இதயத்தில் தினம்தினம் போர்க்களம்!

                                  — தல்லிதாசன்


                            நேரம் : காலை ௰.௦, மாசி 7, 2019

காதல்

பேருந்தில் செல்லும் உன்னை
காண முடியாத ஏக்கத்தில்
அங்குமிங்கும் அலைகிறான் கதிரவன்!

கதிரவன் வெப்பம் 
உன்னை வாட்டுமே என்று!
சன்னல் ஓரத்தில்
நகரும் மரங்களின்
கீற்றுத் தென்றலாய் என்
மூச்சுக் காற்றை அனுப்புகிறேன்!

தென்றலோடு கலந்த என்அன்பு
உன்னைத் தீண்டும் 
ஒவ்வொரு நொடியும்!
கதிரவன் வெப்பம் மட்டுமல்ல!
மேகம் சிந்தும் மழைகூட
உன்னை விட்டு விலகி நிற்கும்!

                                 — தல்லிதாசன்

காதல்

வலிகளில் புரிந்த
வாழ்வின் அர்த்தம்! 
இன்று! உன்
விழிகளில் தெரிகிறது!

விழியின் ஒளியில்
உயிர் பிழைத்தாலும்!
வெப்பம் தாங்காமல்
உயிர் எரிந்தாலும்!
உன்!
பார்வை தரும் பரவசத்தில்!
எரிந்தாலும் எழுவேன்!
பிழைத்தாலும் மடிவேன்!

                                — தல்லிதாசன்
                           நேரம் : ௨௰௩.௰, தை ௨௰௮,  2019


கடவுள் இல்லாமல் இருந்திருந்தால்

உலகில் கடவுளைப் படைக்க
மனிதன் மறந்(றுத்)திருந்தால்!

எல்லை வேலிகள்
இல்லாமல் போயிருக்கும்!
ஆயுதக் கிடங்குகளில்
அன்பு மலர்கள் பூத்திருக்கும்!
சமத்துவம் வாழ்வின்
அங்கமாய் மாறியிருக்கும்!

மொத்தத்தில்!
மதத்திற்குப் பதிலாக
மனிதம் வளர்ந்திருக்கும்!
                                 — தல்லிதாசன்
                                நேரம் : ௨௰௨.௦௦; தை24, 2019

கனவுகள்

விடியலை விரும்பாத 
விழிகளின் இமைகளில்! உன்
விரலின் வெப்பம்பட்டு
விழித்திடும் காலைப் பொழுதுகள்!
கரையும் இரவுகளில் என்றுமே
கலையாத என்  கனவுகள்!

                                — தல்லிதாசன்
                                 22.35 , தை23, 2019

தனிமை தொலைத்தேன்

பனிமழையில் நனையத் துடித்தேன்! அது!
உன்நினைவை அள்ளித் தெளிக்கிறது!

வெள்ளைப் பூக்கள் சிந்திய சாலையை! உன்
எண்ணப் பூக்களின் வாசத்தில் கடக்கிறேன்!

உன்நிழலின் பிம்பம் தீண்டா பொழுதிலும்
உன்நினைவின் நிஜங்கள் சீண்டி வாழ்வதால்
நகரும் நாட்கள் நரகமாய்த் தெரியவில்லை!
தனிமையின் அர்த்தம் கனவிலும் புரியவில்லை!

                         — தல்லிதாசன்

வனம்

மரங்களில் தூண்கள் அமைத்து!
இலைகளால் கூரை வேய்ந்து!
இயற்கை அமைத்த மாளிகை!

வகை வகையாய் மரங்கள்!
உயிரைப் பறிக்கும் விலங்குகள்!
மருவத்திற்கு அற்புத மூலிகைகள்!

எண்ணில் அடங்கா பூச்சிகள்!
அவற்றின் பேச்சுகளின் ஒலிக்கலவை!
சருகும் சகதியுமாய் வழியில்லா பாதை!

சற்று அண்ணாந்து பார்த்தால்!
குழந்தை போல் கண்ணாமூச்சி
ஆடும் ஆகாயச் சூரியன்!

இலைகளின் வாசம் இதமாய் தீண்ட!
மரங்களின் வாசம் மனதை நிறைக்கும்!
வந்தவழி மறந்து நின்றால்
கற்கால வாழ்வைக் காட்டும்! 
அந்த!
அழகிய வனம்! அதைவிட்டுப் பிரிய
என்றுமே விரும்பாது மனம்!

                          — தல்லிதாசன்

நீ தான்! நீ மட்டும் தான்!

உயிர் விட்டு உடல் என்றும் வாழ்வதில்லை!
என்உயிர்  என்றும் நீயென்று தெரியாதா?

உயிர் விட்டு உடல் என்றும் வாழ்வதில்லை!
என்உயிர்  என்றும் நீயென்று தெரியாதா?
உன் மடியினில் எந்தன் தலை சாய்த்துஎன்
மரணத்தை ஏற்பேன் தெரியாதா?


தென்றலில் இளந்தெ ன்றலில்
உன்சுவாசத்தால் நான் வாழ்கிறேன்!
காட்சிகள் என்காட்சிகள் 
உன்கண்களில் நான் காண்கிறேன்!


உனக்கென வாழும் நொடிகளில் தான்!
என் இதயமும் துடிக்க அனுமதிப்பேன்!
ஒருநொடி உனை நான் பிரிந்தாலும்!
இந்த உலகத்தின் உறவினை இழந்திடுவேன்!

இமை நீங்கிய பின் விழி உறங்கிடுமோ?
என்இமையே உனக்கேன் புரியவில்லை??


தென்றலில் இளந்தென்றலில்
உன்சுவாசத்தால் நான் வாழ்கிறேன்!
காட்சிகள் என்காட்சிகள் 
உன்கண்களில் நான் காண்கிறேன்!


நீயுதிர்க்கும் முத்துப் பேச்சில்!
தேன்சிதறும் வண்ணக் கூட்டில்!
என்உலக மலர்கள் தினம் பூத்திடுமே!
அந்த மலரின் மணத்தில் உயிர் ஊறிடுமே!

கரை ஒதுங்கிய பின் கயல் வாழ்ந்திடுமோ!?
என்கடலே எனைநீ ஒதுக்காதே!!


தென்றலில் இளந்தென்றலில்
உன்சுவாசத்தால் நான் வாழ்கிறேன்!
காட்சிகள் என்காட்சிகள் 
உன்கண்களில் நான் காண்கிறேன்!

                                     -- தல்லிதாசன்