புதன், 7 நவம்பர், 2018

மனிதிக்காக

நான்கு சுவற்றில் உலகம் கொண்டு
அன்பை வேண்டி அயராது உழைத்தும்!
கொள்ளைப் புறத்துக் கோவிலில்
குடியிருப்பாய் நீ!
அந்த மூன்று நாட்களில்!

கல்விக்கான உரிமை பறித்து!
வீட்டு வேலை உனக்கென்றும்
நாட்டு வேலை எனக்கென்றும்
பாகம் பிரிக்க! முடங்கிக் கிடந்தாய்
வீட்டுக்குள்ளே முக்காடு போட்டு!

கற்பென்றும் மானமென்றும்
கட்டுக் கதைகளால் வஞ்சிக்கப்பட்டாய்!
பதியின் உடலில் பாதியான பேதையே!
சதியின் பெயரால் தீயில் இறங்கினாய்!

உணர்வை இழந்து! உரிமை இழந்து!
கலாச்சாரத்தைக் காவல் காக்கிறாய்!
போதைப் பொருளாய் தீட்டுப் பொருளாய்!
பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறாய்!

மனிதியே நீ மறந்து போனாயே!
உன்னை அடிமையென்று 
கட்டியங் கூறுவதே 
இந்தக் கலாச்சாரம் என்று!

மனிதியே நீ மறந்து போனாயே!
வீட்டுக்குள்ளே உன்னை அடைத்து
பல்லிளித்து பரிகசிப்பது
இந்தப் பாரம்பரியம் என்று!

மனிதியே நீ மறந்து போனாயே!
வீரத்தின் விளைநிலத்தில்
விதையை விதைப்பவள் நீ!
பண்பாடு கலாச்சாரம் எல்லாம்
உன் பாதுகைக்கு கீழன்றோ!

மீண்டும் ஒருமுறை உறக்க சொல்வாய்!
உன்னை தீட்டாய் கருதும் கலாச்சாரம்
உலகிற்கே தீட்டு என்று!
உன்னை ஒடுக்கத் துடிக்கும் பாரம்பரியம்
உலகிற்கே கேடு என்று!

                           — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக