சேமித்த பணத்தை செல்லாக் காசாக்கி
ஏழைகளின் உயிரைக் குடித்த கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
தைப் புரட்சியின் வெற்றிச் செய்தியை
வன்முறை தீமூட்டி பறைசாற்றிய கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
நிவாரணம் கேட்டு போராடிய விவசாயியின்
நிர்வாணம் மறைக்க துப்பில்லாத கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
ஏழைகளுக்கு கல்வியை எட்டாக் கனியாக்கி
அனிதாவின் கனவை சிதைத்த கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
நெற் களஞ்சியத்தைப் பாழாக்கி நம்மண்ணின்
வளத்தை அழிக்கத் துடிக்கும் கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
அரிசிக்கும் பருப்புக்கும் மானியத்தை தடைசெய்து
ஏழைகளின் வயிற்றில் எரியூட்டிய கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
சொந்த நாட்டு மீனவனையே சுட்டுத்தள்ளும்
தரங்கெட்ட தேசத்தின் அடையாளக் கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
கடலில் தத்தளித்த மீனவனை காக்காத
வானூர்திகளின் சாகசத்தை ரசிக்கும் கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
கடற்கரையை தாரை வார்த்து நம்மை
அகதிகளாய் மாற்றத் துடிக்கும் கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
மக்களை அழிக்கும் முனைப்போடு பிறக்கும்
புதிய இந்தியாக்களின் தொப்புள் கொடி
கோட்டையில் பறக்குது பாரீர்!
அசையும் கொடிதந்த அவலங்கள் உணர்ந்த
மக்களே! வெள்ளை நூலொன்றே கொடியை
அசைக்கும் உண்மையை உணர்வீர்!
அந்தநூல் அறுபடும் நாள் வரையில்!
நமக்கு சுதந்திரமும் இல்லை! இந்தியக்
கூட்டமைப்பில் குடியரசும் இல்லை!
இளைஞனே நீ செயல்படு!
இந்த உண்மையை உணர்ந்து!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக